உருமாற்றம்

எனக்குள்ளே வெறுமை எனக்குள்ளே துக்கம் எனக்குள்ளே மௌனம் எனக்குள்ளே தனிமை என எல்லாவற்றையும் பூட்டி வைத்தேன் நீ வரும் நாளில் பட்டாப்பூச்சிகளாய்ப் பறக்கவிட

என் அன்புகள்

உன்முகத்தை வருடும் தென்றல் என் முத்தங்களாய் இருக்கட்டும் கண்களில் படும் காலைக் கதிர்கள் என் கண்களாய் இருக்கட்டும் கழுத்தில் வழியும் வியர்வைத்துளி கைவிரல்களாய் இருக்கட்டும் இரவில் தாலாட்டும் நித்திரை என் தழுவலாய் இருக்கட்டும்

எங்கும் நீ

கண்பார்வை படுமாறு இல்லாதிருந்தாலென்ன வண்ணமெல்லாம் நீ என் ஒலி கேட்கும் தொலைவில் இல்லாதிருந்தாலென்ன எண்ணமெல்லாம் நீ   கைக்கெட்டும் தூரத்தில் இல்லாதிருந்தாலென்ன கருத்தெல்லாம் நீ   மெய் அணைக்கும் அணுக்கம் இல்லாதிருந்தாலென்ன உயிரெல்லாம் நீ