வானம்

இரவின் காதோரம் ஏதோ இரகசியம் சொல்லிச் செம்மையாய் அவளுள் சிதறிக் கலக்கிறான் கதிரவன் என் வானில் இது பொன் மாலை உன் வானம் அங்கே என்ன நிறம், என்னுயிரே? என் நினைவுகள் சுடர் விடும் காரிருளா? என் தனிமை சுட்டெரிக்கும் நண்பகல் பேரொளியா? என் அணைப்பாய் இறுகி மயக்கும் மாலை மஞ்சளா? உன் அருகின்மையில் கனக்கும் மேகமூட்ட மென்பழுப்பா?சொல்லாதே...எதுவானாலும் அதுஎன்னிறந்தானே

நிசப்தம். இருள். (In silence.. )

விளக்கை அணைத்துவிடு வெளிச்சம் தேவையில்லை அடையாளங்களற்ற இருட்டில் இனம் கண்டுகொள்ளலாம் கண்ணுக்குப் புலப்படாத காரிருளில் திரைகளில்லை இருளின் போர்வையிலே ஒளிந்து பார்க்கத் தேவையில்லை உன் தோள்களில் என் விரல்கள் முகமறியா நிசப்தத்தில் உன் முக வரி தேடும் முத்திரைகள் பகலின் கணங்களில் புதைந்து போன நினைவுகளை அவசர ஓட்டத்தில் அமிழ்ந்து போன நெகிழ்வுகளை மௌனம் தரும் இழைப்பொழுதில் மோகத்துடன் உயிர்ப்பிக்கலாம் நிசப்தம்...இருள்... நிரடல் இல்லா சாத்தியங்கள் என் கையை மட்டும் பற்றிக்கொள் எழும் வரைக்கும் அமிழ்ந்திருக்க Translation: … Continue reading நிசப்தம். இருள். (In silence.. )

நம் உரையாடல்கள்

இன்றைய பொழுது கழிந்ததெப்படி என்ன உண்டாய் என்ன உடுத்தினாய் என்ன உணர்ந்தாய் பக்கத்து வீட்டு குழந்தை தந்த முத்தம் படித்து முடித்த கதையின் சுருக்கம்  தங்கையுடன் போட்ட சண்டை தாய்மடியில் தாலாட்டிய தூக்கம் எல்லாவற்றையைம் பட்டியலிட்டு  காத்திருந்து தொலைபேசியில் அழைக்கும் நொடிகளில் அன்பின் அலையில் அமிழ்ந்து மௌன ஓசையில் கரைந்து போகிறேன் நான் (இப்படித்தான் விவேகானந்தர் காளியிடம் கேட்க என்று பட்டியலிட்டு, காளியைப் பார்த்ததும் ஞானம் மட்டும் போதுமென்பாராம்)

உருமாற்றம்

எனக்குள்ளே வெறுமை எனக்குள்ளே துக்கம் எனக்குள்ளே மௌனம் எனக்குள்ளே தனிமை என எல்லாவற்றையும் பூட்டி வைத்தேன் நீ வரும் நாளில் பட்டாப்பூச்சிகளாய்ப் பறக்கவிட

என் அன்புகள்

உன்முகத்தை வருடும் தென்றல் என் முத்தங்களாய் இருக்கட்டும் கண்களில் படும் காலைக் கதிர்கள் என் கண்களாய் இருக்கட்டும் கழுத்தில் வழியும் வியர்வைத்துளி கைவிரல்களாய் இருக்கட்டும் இரவில் தாலாட்டும் நித்திரை என் தழுவலாய் இருக்கட்டும்

ஊமை இரவு

உன்னோடு கழித்தஇரவுகள் என்றால் ஊருக்கோரு பொருள் உனக்கும் எனக்கும் வேறு பொருள் உன்னோடு பேசிக் கழித்த இரவுகள் என உண்மை விளம்பினாலும் சந்தேகக் கேள்வி சந்திக்குள் தொக்கி நிற்கும்   ஊமைகளாகவே இருந்துவிட்டுப் போவோம் உனக்கும் எனக்கும் ஒரே பொருள்

எங்கும் நீ

கண்பார்வை படுமாறு இல்லாதிருந்தாலென்ன வண்ணமெல்லாம் நீ என் ஒலி கேட்கும் தொலைவில் இல்லாதிருந்தாலென்ன எண்ணமெல்லாம் நீ   கைக்கெட்டும் தூரத்தில் இல்லாதிருந்தாலென்ன கருத்தெல்லாம் நீ   மெய் அணைக்கும் அணுக்கம் இல்லாதிருந்தாலென்ன உயிரெல்லாம் நீ